“நினைப்பது கமலியா, கார்த்திகாவா? கமலிக்காக கார்த்திகா நினைப்பதால்தான் இதெல்லாம் வருகிறது. அப்படியென்றால் இந்தக் கமலிகள்தான் கார்த்திகாவா? இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ரிஷிமூலம் நதிமூலம் நமக்குத் தேவையில்லை. கதை நமக்குத் தரும் அனுபவங்களென்ன… அதுதானே முக்கியம் என்று கதையைப் பார்க்கப்போனால், சில கதைகளில் கதையைக் காணவில்லை. புதுவிதமாக சா. கந்தசாமி சொல்வதுபோல் கதைகளை கதைகளுக்குள்ளிலிருந்து வெளியேற்றியிருக்கிறார் கார்த்திகா. அது ஒரு கலைச் சவால் இல்லையா? அப்படியெனில் கதைக்குள் எஞ்சி நிற்பது என்ன… விவரணையா, சம்பவங்களா, உணர்வுகளா என்றால் அவையுமிருக்கின்றன. ஆனால், அவற்றுக்குள் நம் கதையை, நம் அனுபவத்தைப் பொருத்திக்கொள்ளும் இன்னொரு கதை வெளியையும் உருவாக்குகிறார்.”