Oothuvathi Pul/ஊதுவத்திப் புல் - C.S.Sellapa/ சி.சு.செல்லப்பா
இந்த நூலில் பிச்சமூர்த்தியின் ‘தரிசனப் பார்வை’ வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் ‘மகா' படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்). வ.வே. சுப்ரமணிய அய்யர் ‘தன் கவிதை' என்ற கட்டுரையில் ‘பேருண்மை, பேரனுபவம்' என்று குறிப்பிட்டு, இவற்றை உணர்த்துபவர்கள் உலக மகா கவிகள் என்று சொல்லி ஹோமர், வால்மீகி, வியாசர், ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பர் என்று பெயர்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். வ.ரா, பாரதியை அந்த வரிசையில் சேர்த்து ‘மகாகவி' என்று கணித்திருக்கிறார். பிச்சமூர்த்தியை அந்த வரிசையில் சேரத்தக்கவர் என்பது அவரது கவிதை சாதனையை வைத்து என் கணிப்பு மதிப்பீடு.
மேலே குறிப்பிட்ட அத்தனை கவிகளும் காவிய இயல் (கிளாஸிஸம்) கொள்கையாளர்கள். நவரசங்களையும் திறன்படக் கையாள்வது கிளாஸிஸத்தின் தலைசிறந்த லட்சணம். தற்காலத்தில் பாரதியும், பிச்சமூர்த்தியும் நவரசங்களையும் கையாண்டு இருப்பதோடு காவிய இயல் இதர லட்சணங்களையும் பொருத்தி இருக்கிறார்கள்.
- சி.சு. செல்லப்பா