என் நண்பர் சப்தரிஷிக்கு லா.ச.ரா. தகப்பன். எனக்கு தெய்வம். கண்கண்ட தெய்வம். நான் ஆராதனை செய்யும் எழுத்தாளர்களில் ஒருவர். ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன் இப்படிச் சொல்லலாமா என்று கேட்கலாம். இந்தியாவின் நிலைமையே வேறு. ஆதிசங்கரரின் வாழ்வைப் பார்த்தால் நான் சொல்வது புரியும். சங்கரரும் கவிஞர்தானே? ஆன்மீகத்தில் அடையாளம் காணப்படுவதால் அவரது கவிஞர் அடையாளம் இல்லாமல் போய்விடுமா என்ன? ஆதிசங்கரரின் வழியில் வந்த கடைக் கொழுந்துதான் லா.ச.ரா. என நான் காண்கிறேன்.
எல்லா விஷயங்களிலுமே லா.ச.ரா. இறையருள் பெற்றவர் என்று சொல்லலாம். நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர் எனில் இயற்கையின் அருள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக அக்காலத்திய எழுத்தாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சி.சு. செல்லப்பா, க.நா.சு. என்று எல்லோருடைய கதையும் ஒரே மாதிரிதான். ஆனால் லா.ச.ராவோ சௌகர்யமாக ஒரு வங்கியில் வேலை பார்த்தவர். நான் அப்படி வாழ்ந்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால் லா.ச.ரா. ஒரு குடும்பஸ்தனாக இருந்துகொண்டு, வங்கியில் வேலை பார்த்துக்கொண்டு, எந்த எழுத்தாளராலும் தொட முடியாத சிகரங்களைத் தொட்டிருக்கிறார் என்றால் உள்ளே உள்ள ஏதோ ஒன்றுதான் எழுதியிருக்கிறது. நான் அதை சரஸ்வதி என்கிறேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லிக்கொள்ளலாம்.
- சாரு நிவேதிதா
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more