கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க விரும்பியிருப்பதை படிக்கும்போது நீங்கள் உணரலாம். ஒருவன் எந்த சூழ்நிலையில் எப்படியான உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அதற்குமுன் அவன் எதிர்கொண்ட சூழல்களே தீர்மானிக்கிறது என்பதை சற்றே அழுத்தமாக இந்த நாவல் நிறுவ விரும்புகிறது. முன்முடிவுகள் இன்றி சகமனிதனை அணுகுதலே ஒரு பெரும் உரையாடலை சாத்தியமாக்கும் என்பதையும் இந்த நாவலில் பேசியிருக்கிறார். கடந்த ஆறு வருடங்களாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் இவர், நாடெங்கும் தான் பணிபுரிந்த சாலைகளில் எல்லாம் மீண்டும் ஒருமுறை பயணித்து, அதை பதிவுகளாக்க வேண்டும் என்பதை தனது ரகசியக் கனவாகக் கொண்டுள்ளார். மனிதர்கள் மட்டுமே நகர்கிறோம், சாலைகள் அங்கேயேதான் இருக்கும்.