பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பன்னிரண்டு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.
தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பாளரும்கூட. ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, பாபர் நாமா, மகா வம்சம் ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் வந்தவை. பணி மாறுதல்களின்போது அவர் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா. ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது.
பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். 1989ம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் கிட்டிய பின்பே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார்.
1990ம் ஆண்டு கி. கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா. ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய ‘மொஹஞ்சதாரோ’ என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா. ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார்.
1992ம் ஆண்டு டிசம்பர் முதல் 2000வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணி புரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.
2004ம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணி புரியத் தொடங்கினார். ‘நியு ஹொரைசன் மீடியா’ நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் பதிப்புத் துறையில் ‘கிழக்கு பதிப்பக’த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பேசப்படுபவை.
2011ம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா. ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராக உள்ளார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காகப் பெருமைக்குரிய பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர்.
75 products