அனல் அடங்கா வீட்டின் சூளைச்சுவர்கள் மூக்கை அரிக்க பல முறை கேட்கும் மெல்லிசைப்பாடல்கள் அலுப்பூட்டுகின்றன கருக்கலின் போது வீசும் மெல்லிய குளிர்காற்றிக்கு காத்திருக்கிறேன் முறுக்கும் உடல் வலியுடன் ஆழ்ந்த உறக்கத்தை அது துருவங்களில் இருந்து எப்படியும் தருவிக்கும் கொசுக்கள் அற்று இரண்டு பழங்கள் மீந்திருந்தால் ஒரு நீண்ட பகல் பொழுதை மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புக்கொடுப்பேன் ஒரு லாரி டிரைவரின் வெகுதூரங்களுக்கும் அணைகளில் வளர்ப்பு மீன்களுக்கு வலை வீசுபவரின் துள்ளும் புலர்காலைக்கும் பள்ளிக்குச்செல்லும் சிறார்கள் விடியும் வரை மூங்கில் கூடைகளில் பூப்பறிக்க தலைச் சும்மாட்டில் கட்டிய டார்ச் ஒளி மங்கும் பொழுது இரவு ஷிப்ட் முடிந்து நூற்பாலைப் பேருந்துகள் பெண்களை ஊருக்குள் இறக்கி விடும் தலைகலைந்த வேளையில் பால் வேகன்கள் ஹார்ன் ஒலிக்க பத்திரிக்கைக் கட்டுகளைப்பிரித்தனுப்பும் இடத்தில் இரையும் ஒரு தேனிர் பாய்லர் முன்பு பற்கள் நடுங்கக் கதகதப்புடன் குளிர்காலத்திற்கு முகமன் சொல்கிறேன்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more