எல்லாருமே 'எனக்கு ஆங்கிலத்தில் எழுதித்தான் பழக்கம் ஸார்!' என்று சொல்லிக் கொண்டுதான் எழுத ஆரம்பிப்பார்கள். உஷாசுப்ரமணியனும் அதற்கு விலக்கல்ல. ஆனந்த விகடனில், அதிபர் பாலனின் மனைவியார் மூலம் எனக்கு அறிமுகமானவர் உஷா. 'அவர் நன்றாக எழுதுவார்' என்ற நம்பிக்கையுடன் நானும் அவரை 'விகடனி'ல் அறிமுகம் செய்து வைத்தேன். முதல் சிறுகதையே மிகவும் நன்றாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்துகொண்டேன் - அவர் முறைப்படி 'ஜர்னலிஸம்' படித்துப் பட்டம் பெற்றவர் என்று! உஷாவின் எழுத்துகளில் ஒரு தனியான துணிச்சல் இருக்கும். கருத்துகளைத் தைரியமாக எடுத்துச் சொல்லத் தயங்க மாட்டார். புதுமைப் பெண்ணாக வாழவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு நிறைய உண்டு. அது அவருடைய பேச்சிலும் வெளிப்படும். எழுத்திலும் 'பளிச்'சென்று இருக்கும்! 'மனிதன் தீவல்ல' - என்ற அவருடைய குறுநாவலின் 'தீம்' அப்படிப்பட்டது. ஆனால் அதை வெகு நயமாக, அருமையாக எழுதி இருந்தார். அதை நான் பல தடவைகள் படித்திருக்கிறேன். 'இதயம் பேசுகிறது' இதழில் அவர் தொடர்கதை எழுதி இருக்கிறார். 'கண்ணீர்ப் பூக்கள்' என்ற தலைப்பில் அவர் ஓர் உண்மைக் கதையை ரொம்ப உருக்கமாக எழுதி இருக்கிறார். அவருடைய எழுத்தில் ஒரு தனித்தன்மை உண்டு. கதையானாலும், கட்டுரையானாலும், போட்டியானாலும் அது தெரியும். - மணியன்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more