Pattukottai Prabhakar Thearndedutha sirukathaigal/பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
நான் ஏன் சிறுகதை எழுதுகிறேன் என்று யோசித்தால் முதலில் மனதிற்கு வருகிற பதில் 'பிடித்திருக்கிறது' என்பதேயாகும். குறைந்த பக்கங்களில் ஒரு விஷயத்தைப் பளிச்சென்று சொல்ல சிறுகதைதான் மிகச் சிறந்த வடிவமாகக் கருதுகிறேன்.
ஒரு முழு நாவலை எழுதினாலும், நீண்ட தொடர்கதையை எழுதினாலும் கிடைக்காத அதீத திருப்தி ஒரு சிறுகதையை எழுதும்போது எனக்குக் கிடைக்கிறது. சிறுகதை என்பது பூப்பூத்தல் போல தானாக அமையவேண்டும் என்று நம்புகிறவன் நான். ஒரு துளி சிந்தனை போதும் கருவாக்க. ஆனால் உருவாக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன். அதிசயமாக ஒரே வீச்சில் எழுதி முடிப்பவையும் உண்டு. ஆனால் ரசித்து ரசித்து, லயித்து லயித்து சில தினங்களாவது எடுத்துக்கொண்டு சிறுகதை எழுதத்தான் பிடிக்கிறது எனக்கு.
இந்தத் தொகுப்பில் எனது நாற்பத்தி நான்கு வருட சிந்தனைச் சிதறல்கள் பரவிக் கிடக்கின்றன. அந்தந்த சமயங்களில் என்னை பேனா எடுக்க வைத்த ஒரு சம்பவமோ, ஒரு செய்தியோ, ஒரு சிந்தனைப் பொறியோ, ஒரு கோபத் துடிப்போ, ஒரு இயலாமை வெறுப்போ, ஒரு ஆசையோ, ஒரு கற்பனைத் துளியோ உருவம் மாறி சிறுகதைகளாகியிருக்கின்றன.