கடந்த இரு பத்தாண்டுகளில் நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் படைப்புகளில் பெரிதளவில் வெளிப்பட்டிருக்கவில்லை. வாழ்வையும் அதன் சிக்கலான முரண்களையும் உள்ளார்ந்து பார்க்கும் படைப்பாளிகள் வெகு சொற்பமாகவே வருகிறார்கள். இந்தத் தலைமுறையின் பிரதான சிக்கலென்பது எதன் மீதும் நம்பிக்கையற்று இருப்பது. லட்சியவாதங்கள் பொய்த்துப்போன இவர்களிடம் தேடல் குறைந்து போனதைக் கண்கூடாய்ப் பார்க்கமுடிகிறது. முழுக்க நகர்மயமாதலுக்குப் பிறகான வாழ்க்கை மட்டுமே பெரும்பாலான கதைகளில் வெளிப்படுவதைப் பார்க்கையில் கிராமங்களில் இருந்தும் சிறு நகரங்களில் இருந்தும் எழுது வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனதோ என்னும் அச்சம் மேலிடும். பிழைப்பிற்காக இடம் பெயர்ந்தாலும் ஸ்ரீனிவாசனுக்கு மனதின் ஆழத்தில் ஊரின் வேர்கள் அழுத்தமாய் பிணைந்துள்ளதை இந்தக் கதையை வாசிக்கையில் தெரிந்து கொள்ள முடிகிறது. சுப்பிரமணியின் அப்பாவைக் குறித்த சித்திரம் ஒரு சிறுநகரத்தில் நாம் பார்க்க முடிகிற தொண்ணூறு சதவிகித அப்பாக்களின் பொதுவான அடையாளம். அவன் மீது எப்போதும் பசையின் வாசணை இருந்து கொண்டிருக்கும் என்பதை வாசித்தபோது ஊரில் ஒவ்வொரு மனிதர்களின் வீட்டையும் இப்படி பிரத்யேகமான வாசணைகளால் அடையாளம் வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. - லஷ்மி சரவணகுமார்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more