Kadhal Naadagam /காதல் நாடகம் -R Abilash/ஆர் .ஆர். அபிலாஷ்
நாடகப்பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, ஒரு சிறிய வசனம் ஒரு நடிகனின் உடல்மொழியுடன் சேர்ந்து உணர்வூட்டத்துடன் வெளிப்படும்போது எப்படி ஒரு மகத்தான தோற்றம் கொள்கிறது, ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும்போதும் ஒரு பிரதி எப்படியான படைப்பூக்கத்துடன் மறுபிறப்பெடுக்கிறது என கவனித்தபோது நான் மிகவும் உவகை கொண்டேன். ஒரு நாடகப் பிரதியானது அதனளவில் வெறும் எலும்புக்கூடுதான். அதனை மனித உடல்களும், குரல்களும் எடுத்தாளும் போதே அது முற்றிலும் புதிய ஒரு வடிவத்தை, வண்ணத்தைப் பெறுகிறது, அது எவ்வாறு நிகழ்கிறது எனக் காண திகைப்பாக இருந்தது. நாடகமே மிகச்சிறந்த ஒரு சமூகக் கலை வடிவம் என்று நான் இப்போது நம்புகிறேன்.
நாடகங்களை எழுத ஆரம்பித்த பின்னரே வசனங்களை உயிர்த்தெறிப்புடன் எழுத நான் கற்றுக்கொண்டேன். ஒரு நாடகீயமான மோதல் கதைக்கு எவ்வளவு முக்கியம், தொடர்ந்து சமநிலைக்கு வருவதற்காகத் தவிக்கும் எதிர் உணர்வுநிலைகளின் நாட்டியமே உரையாடல்கள் என்றும் எனப் புரிந்துகொண்டேன்.