வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது. இந்நூலின் தலைப்புக்கு ஊமத்தை நீலம் என்கிற பெயரைக் கண்டடைய சிரமப்பட வேண்டியிருந்தது. விஷம் தோய்ந்த இந்தச் சொற்களுக்கு ஊமத்தைப் பொருத்தமானதுதான். இரவு நேரத்தில் நல்நிசப்தத்தில் போதையும் துக்கமும் கலந்து காற்றில் கேட்கும் அநாமதேயக் குரல் நம்மை உருகச் செய்யுமல்லவா, அப்படிச் சில கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. பொருள்வயின் பிரிவு தரும் ஏக்கங்களும் பால்ய மற்றும் குடும்ப நினைவுகள் சார்ந்து குறிப்பாக மனைவி மகளைச் சுட்டும் கவிதைகள் இரவின் அகவலாகவும் கேவலாகவும் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் இருக்கும் அந்தரங்கத்தன்மை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அனுபவமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மற்றவருடையதை நம்முடையதாக ஏற்றுக் கொள்வதும், நமதை இன்னொருத்தருக்குக் கடத்தி விடுவதும்தான் கலையின் அடிப்படைச் செயல்பாடாக இருக்க முடியும் அல்லவா?
- அய்யனார் விஸ்வநாத்
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more