காந்தீய யுகத்தில், நான் அனுபவித்ததையும், கண்டதையும், இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம். என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும், ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது. இராமன் உன்னத தர்மங்களை நடத்திக் காட்ட வந்த அவதார புருஷன், மகாத்மா காந்திஜியின் இலக்ஷிய புருஷன். அவர் மண்ணிலே வானத்தைக் கொண்டுவர ஆசைப்பட்டு அதற்கு ராமராஜ்யம் எனப் பெயரிட்டார். இப்படிப்பட்ட இராமனை, வால்மீகி மனிதனாகவும், கம்பன் கடவுளின் அவதாரமாகவும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால், நான் காந்திஜியை வெறும் மனிதனாக ஒருபொழுதும் பார்க்கவில்லை. மகாத்மாவாகவேதான் தோற்றமளித்தார். தெய்வாம்சம் கொண்ட ஓர் அவதார புருஷனாகவே தோன்றினார். யாரிடமெல்லாம் நற்பண்புகள் மேலோங்கிக் குவிந்து கிடக்கின்றனவோ அவர்களைக் கடவுளின் அம்சமாகக் கொள்வது நம் நாட்டு மரபு. அறுபத்து மூன்று நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் கோவில்களில் தெய்வமாகக் கொண்டாடவில்லையா? ஆனால், இந்த காந்தி என்ற நாயனாரோ, ஆழ்வாரோ, தம்மைப்போலவே பிறரையும் உயர்த்தினார். ஆகவே, அவரிடம் எனக்கு பக்தி ஏற்பட்டதில் ஆச்சரியமில்லையல்லவா?
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more