இந்த நாவலின் கதை, களம், கதாபாத்திரங்கள் எல்லாமே என் ஊரும் என் உறவுகளும்தான். கிட்டத்தட்ட என் குடும்பக் கதை. மொத்தத்தில் என் ஊரின் கதை. நாவல் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் இந்தக் கதைதான் என்னை எழுதத் தூண்டியது. குறிப்பாக மூக்கன் என்னும் கதாபாத்திரமே இந்தக் கதையின் ஓட்டத்தையும் போக்கையும் தீர்மானித்தது. எழுத அமர்ந்தபோது என் நிலம் ஒரு களத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஆக, மொத்த நாவலையும் எழுதி முடிக்க எனக்குப் பேருதவியாக இருந்தது நிலமும் மூக்கனும்தான். இந்த மூக்கன் வேறு யாருமல்ல என் தகப்பனார்தான். உண்மையான பெயர் வீரமுத்து. ஊரில் அவருக்குப் பெரிய மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. அப்படின்னா சின்ன மூக்கன்னு ஒருத்தர் இருக்கணுமேன்னு தோணுதில்ல. ஆம், அப்படித் தோணுறது சரிதான். இந்தக் கதையில் சின்ன மூக்கனும் உண்டு. அது என் சித்தப்பன். கதையில் அழகர் என்று பெயர் மாற்றியிருப்பேன். - மௌனன் யாத்ரிகா
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more