Manimegalai Part 2/மணிமேகலை பாகம் 2 - A.Marx/அ.மார்க்ஸ்
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவுகளாய்,உலகையே இல்லமாய்க் கொள்ளுதல் என்பதுதான். மணிமேகலையின் வாழ்வு அப்படித்தான் அமைகிறது. அந்த வகையில் துறவு என்பது நாம் மனம் கொண்டிருப்பதுபோல “பற்றறுப்பு” என்பதாகவன்றி எல்லோரையும், குறிப்பாக எளிய மக்களின் மீதான “பற்று மிகுப்பு” என்பதே பௌத்தம் முன்வைக்கும் பொருளாகிறது. அதாவது. தன் பிள்ளை, தன் குடும்பம் என்பதாகச் சுருங்காமல் உலக மக்கள் அனைவரின் நலம், அவர்தம் பசி தீர்த்தல் உள்ளிட்ட அறச் செயல்களுக்குத் தன் வாழ்வை அர்ப்பணிப்பது என்றாகிறது. இப்படியான பற்று மிகுப்பிற்குக் குடும்பம் ஒரு தடை.
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.